Friday, August 26, 2011

7. இயற்கை எழுத்து ஒலிகள்


7. இயற்கை எழுத்து ஒலிகள்

      ஆத்ம பிரார்த்தனையில் இயற்கை ஒலிகள் நமது அறியாமைக் கூட்டின் மேலுறைகளைப் பிய்த்தெடுத்து மீள்வதற்கு உதவுகிறது. நாம் இயற்கையைப் பற்றி அறியவும் நமது ஆத்ம சக்தியை அதிகரிக்கவும் நம்மிடம் உள்ள ஆற்றலை அறியவும் நல்ல எண்ணங்களை உருவாக்கவும் உதவுகிறது. இது ஓர் எளிய முறையாகும்.
     ஆத்ம பிரார்த்தனையில் காதில் கேட்கும் இயற்கை எழுத்தின் ஒலியால், காது வலையில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த அதிர்வுகள் மிகவும் நுண்ணிய தன்மை கொண்டவை. அதன் அலைவேகம் எல்லா நரம்புகளையும் சென்றடையச் செய்கின்றன. அதன் அதிர்வு எல்லைகளுக்கு இது வாயிலாகச் செயல்படுகிறது. இதன்மூலம் தத்துவ நிலை, உடற்கூறு நிலை மற்றும் ஆன்மீக நிலை அனைத்தையும் செயல்படச் செய்கிறது.
      இதைத் தினமும் காலை, மாலை இருமுறை செய்வதால் பஞ்சபூதங்களையும், அவற்றின் சக்திகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. லம், வம், ரம், யம், ஹம், ஓம் இந்தப் இயற்கை எழுத்துக்களை பிரணவத்துடன் வாய்விட்டுச் சொல்ல வேண்டும். அஊம், அதீதம் இவற்றை மவுனத்தில் உச்சரிக்கும்போது அதிலிருந்து (மனம்) சுடர் பிரிவதைப் பாவனையில் உணர வேண்டும். இது நடனத்தில் எழிலை விவரிக்கும். இதனை ஒலியின் பயணம் என்று கொள்ளலாம். அதனுடைய இருப்பை அறிய, அறிய நிறைய மனப்பக்குவம் வந்து கொண்டே இருக்கும். அது உடலில் இருக்கிறது. உடலுக்கு வெளியே இருக்கிறது. உணர்வுக்கு உணர்வாகவும் அறிவின் தீர்க்கமாகவும் இருக்கிறது.
     ஆத்ம பிரார்த்தனையில் ஒவ்வொரு இயற்கை ஒலி எழுத்தும் ஒவ்வோர் இயல்புணர்வு மையங்களைப் (சக்கரங்களை) புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இது உடலில் உள்ள நாடிகளுக்குச் சுய சிகிச்சை அளிக்கிறது. இது தன்முனை விழிப்புக்கான நடைமுறைப் பயிற்சியாகும்.
    ஆத்ம பிரார்த்தனையில் இயற்கை எழுத்துகள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உச்சரிக்கப் படும்போது உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும் சம நிலைப்பட்டு உயரிய வளர்ச்சி பெறுகிறது.
     ஆத்ம பிரார்த்தனையில் இயற்கை எழுத்தை விழிப்பு, முனைப்பு, பக்தி மற்றும் சிரத்தையுடன் தொடர்ந்து கேட்டால் ஒருவரிடம் மிகப் பெரிய மாற்றத்தினை அது உணர்த்துகிறது. ஆத்ம பிரார்த்தனை செய்பவரின் தேகமானது இயற்கை எழுத்துக்களின் அதிர்வுகள் அதிர்ந்து அது கவசமாக அவரைச் சுற்றிப் பாதுகாக்கின்றது. ஏனையோரின் தீய எண்ணங்கள் அவரைத் தீண்டாமல் தடுக்கும். ஆத்ம பிரார்த்தனையின்போது பெரும் அமைதியையும், தைரியத்தையும் செய்பவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.
    ஆத்ம பிரார்த்தனையில் இடம்பெறும் இயற்கை எழுத்துக்கள் அதன் விளக்கம் மற்றும் அதன் பயன்கள் :
        1. முதல் பிரபஞ்ச ஒலி. இந்த இயற்கை எழுத்தை 3 முறை ஒவ்வொரு முறையும் நிதானமான மூச்சுடன் நினைக்க வேண்டும். தத் என்ற சொல் இறைவனையும், தன்னலமற்ற இயல்பினையும் குறிப்பிடுகிறது. தன்னலமற்ற தன்மை பூசித்தலுக்கு இணையான பொருள்படும்படி பயன்படுத்தப்படுகிறது. அதாவது செயல்களை செய்யும்போது  பலனை எதிர்பார்த்துச் செய்யக்கூடாது. அதனைத் தனது  தர்மமாகவே எண்ணிக் கொள்ள வேண்டும். தத் என்ற சொல் இறைவனுக்கு பிரார்த்தனையில் அர்ப்பணிக்கப்படுவதாகும். எந்தவிதச் சுய நலத்தையும் மனத்தில் கொள்ளாமலும், தூய்மையான எண்ணத்தினால் இறைவனை மனத்தில் நிலை நிறுத்தி வணங்க வேண்டும். தத் என்ற சொல்லை நினைப்பதால் இறைவனது துணையுடன் பரம்பொருளை அடைய முயலுவோம்.
          2. லம் என்ற இயற்கை எழுத்தை 7 முறை நிதானமான மூச்சுடன் நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்கள் மூலாதாரச் சக்கரப் பகுதியை நோக்கி இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஆசன வாயிலைச் சுருக்க வேண்டும். இந்த மந்திரத்தினால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்திறன் பெருகும். இது சிறுநீரகம், சிறுநீரகப்பை மற்றும் முதுகுத் தண்டுப் பகுதிகளுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது. இந்த மையம் உணர்வுகளுக்கும் உடல் நலத்திற்கும் உறைவிடமானது. வெளி உலகின் ஆன்மீக உணர்வோடு தொடர்புடையது.
        3. வம் என்ற இயற்கை எழுத்தை 7 முறை நிதானமாக மூச்சுடன் நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்கள் °வாதிட்டானச் சக்கரப் பகுதியை நோக்கி இருக்க வேண்டும். இந்த இயற்கை ஒலி மனத்தின் படபடப்பு, நரம்புத்தளர்ச்சி, மந்தப்போக்கு ஆகியவற்றை நீக்கவல்லது. இது விந்து சக்தியை பலப்படுத்துகிறது.
         4. ரம் என்ற இயற்கை எழுத்தை 7 முறை நிதானமான மூச்சுடன் நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்களை மணிப்பூரகச் சக்கரப் பகுதியை நோக்கிச் செலுத்த வேண்டும். இந்த ஒலி மந்திரம் உடலை நோய்க்கிருமிகளிலிருந்து காப்பாற்றி எதிர்ப்புச் சக்தியை உடலுக்குக் கொடுக்கிறது. இது வயிறு, கல்லீரல் மற்றும் கணையம் ஆகிய பகுதிகளுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது.
        5. அஉம் என்ற இயற்கை எழுத்தை 7 முறை ஆழ்ந்த மூச்சுடன் நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்களை ஹ்ரித் சக்கரத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். மூச்சினை உள்வாங்கும் போது அடிவயிற்றின் கீழ்பகுதியைச் சற்றே உள் இழுக்கிறோம். இந்த பிரபஞ்ச எழுத்து ஜிவாத்மாவை இயல்புணர்வால் உணர்ந்து அதை தூய்மைப்படுத்துகின்றது. இதனால் அவரவருடைய இயல்புணர்வுதான் உண்மையான குரு என உணர முடிகின்றது.
           6. யம் என்ற இயற்கை எழுத்தை 7 முறை ஆழ்ந்த மூச்சுடன் நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்களை அனாகதச் சக்கரப் பகுதியை நோக்கிச் செலுத்த வேண்டும். மூச்சினை உள்வாங்கும்போது அடிவயிற்றின் கீழ்ப்பகுதியைச் சற்றே உள் இழுக்கிறோம். இந்த இயற்கை எழுத்தின் ஒலியலைகள் நம்மிடமுள்ள ஆலயத்தை அறியச் செய்து அதைத் தூய்மையுறச் செய்கிறது. இது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும். இதயத்தைப் பலப்படுத்தும். அற்ப விசயங்களில் மன நாட்டம் குறையும்.
         7. ஹம் என்ற இயற்கை எழுத்தை 7 முறை நிதானமான மூச்சுடன் நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்களை விசுத்திச் சக்கரப் பகுதியை நோக்கிச் செலுத்த வேண்டும். இதில் மன அமைதியும் உடற்சக்தியும் உண்டாகும். தைராய்டு, தொண்டை நுரையீரலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது.
            8. ஓம் என்ற இயற்கை எழுத்தை 7 முறை ஆழ்ந்த மூச்சுடன் நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்களை ஆக்ஞைச் சக்கரப் பகுதியை நோக்கிச் செலுத்த வேண்டும். மூச்சினை உள்வாங்கும்போது அடிவயிற்றின் கீழ்ப்பகுதியைச் சற்றே உள் இழுக்கிறோம். இதில் தன்முனைப்பு, சாரீர ஞானம், ஆன்ம விளக்கம் கிட்டும். இது பிட்யூட்டரி, ஹைப்போதாலம° போன்ற உறுப்புகளுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது.
       9. அதீதம் என்ற ஒலி வடிவில் உள்ள இயற்கை எழுத்தை 7 முறை நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்களைச் சக°ராரச் சக்கரப்பகுதியை நோக்கிச் செலுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள புனிதத் தன்மையை வளர்க்கிறது. இதனால் பிரம்மமே தன் உயிருக்குள் அறிவாக இருக்கிறது என்னும் உணர்வை ஏற்படுத்தும். இது ஆன்மீக ஞானத்தைத் தருகிறது. இது நம்மிடம் உள்ள 1008 நாடிகளுக்கும் பீனியல் சுரப்பிக்கும் நல்ல சக்தியைக் கொடுக்கிறது.
         10. தத், ஹம், அதீதம், ஓம் ஆகிய இயற்கை எழுத்துக்களைக் கொண்ட ஆரத்திப் பாடல். அப்போது எண்ணங்களைக் உச்சிக் குழிக்குக் கீழே உள்நாவுக்கு மேலேயுள்ள இடத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். இதில் மனநிறைவு ஏற்படுகிறது. இங்கு உடல், மனம், ஆன்மா ஒருங்கிணைகின்றன. பழகப் பழக ஆத்ம ஒளியை உணரலாம்.
          11. அதீதம் என்ற ஒலிவடிவமான இயற்கை எழுத்தை 7 முறை நினைக்க வேண்டும். அப்போது எண்ணங்களைத் துரியாதீதம் நோக்கிச் செலுத்த வேண்டும். இது அறிவிற்கு அமைதியும் ஓய்வும் கிடைக்கச் செய்கிறது. இது அண்ட சராசரத்திலுள்ள புனித சக்திகளை வெகு விரைவாக எடுத்துத் தருகிறது. இந்த இயற்கை ஒலி வினைபயனை அழிக்கிறது. இது இயல்பு நிலையை அடையும் வழியை உணர்த்துகிறது.
       12. ஓம் சாந்தி என்ற இயற்கை எழுத்தை 3 முறை நினைக்க வேண்டும். முதல் ஓம் சாந்தி பிரபஞ்ச எழுத்தின் போது துரிய மையத்தில் எண்ணங்களை நிலை நிறுத்த வேண்டும். இரண்டாவது ஓம் சாந்தி இயற்கை எழுத்தின் போது ஹரித் சக்கரத்தில் எண்ணங்களை நிலை நிறுத்த வேண்டும். மூன்றாவது ஓம் சாந்தி இயற்கை எழுத்தின் போது மூலாதாரத்தில் எண்ணங்களை நிலை நிறுத்த வேண்டும். இதனால் உடல், மனம், ஆன்மா ஆகியவை அமைதி அடைகின்றன.
      உடலில் உள்ள முக்கிய இயல்புணர்வு மையங்களில் அதன் பிரபஞ்ச நுண் அதிர்வால் பலப்படுத்தி, தூய்மையுறச் செய்கிறது. இதனால் உடலும், மனமும் சமவிழிப்பு அடைந்து நுண்ணுணர்வு விழிப்பு நிலையில் பெருவிழிப்பால் மேலோங்கி உயிர் ஆற்றலை (குண்டலினி) விழிக்கச் செய்கின்றது.

     ஆத்ம பிரார்த்தனை பழகப் பழக இயற்கை எழுத்துக்களில் ஒலியலைகள் ஆக்ஞாச் சக்கரத்தின் வழியே செல்வதை உணரலாம். ஆத்ம பிரார்த்தனையில் உள்ள இயற்கை எழுத்துடன் நுண்மையான இசையும் சேர்வதால் ஹ்ரித் சக்கரம் அனாகதத் சக்கரம் தூரியாதீதம் ஆகிய மூன்றும் தூண்டப்பட்டு நமது இயல்புணர்வை உயர்நிலையை ஆழமாகவும் விரிவாகவும் செயல்படுத்தி நமது பிறவியின் நோக்கத்தை அடையச் செய்கிறது.


No comments:

Post a Comment