Friday, August 26, 2011

5. ஆத்ம பிராத்தனை



     ஆத்ம பிரார்த்தனை என்றால் இயற்கை ஆற்றலுடன் தன் இயல்பு நிலையைப் பிரார்த்தனை செய்து தினமும் நினைவுபடுத்தி, இயல்புணர்வால் பகுத்து உணர்ந்து பக்தியில் அடைக்கலமாகி மெய்ப் பொருளைப் பெற்ற பெரும் பேராகக் கண்டு உள்ளானந்தம் அடைவதாகும்.
    பிரபஞ்ச ஆற்றல் இயற்கையாகும். இயற்கையே பரம் பொருளாகும். இயற்கையில் எல்லாம் உள்ளது. நம் இயல்பை அறியும் முறைகளில் ஆத்ம பிரார்த்தனையும் ஒன்று. இது தம்மைத் தாமாகவே குணப்படுத்திக் கொள்ளவல்லது. எண்ணங்களைத் தூய்மையாக்க வல்லது. ஆத்மாவை உணரச் செய்கின்ற ஓர் பண்டைக்கால விஞ்ஞான முறையாகும்.
    எளிய முறை ஆத்ம பிரார்த்தனை நாம் எடுத்துள்ள பிறவிப் பயனைப் போற்றி நிறைவேற்றுவதற்கு நமக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய சாதனமாகும்.
     இது மூச்சுப் பயிற்சி, இசை, மந்திரம், முத்திரை ஆகியவை ஒருங்கிணைந்த இணைப்பாகும். இதில் குண்டலினி சக்தியை எளிய முறையில், நுட்பமான முறையில் உணரச் செய்கிறது. பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைந்து ஒன்பது ஆற்றல்களை இயக்கி கற்பகமாகவுள்ள குண்டலினி சக்தியை இயக்கச் செய்கிறது. இதன் ஒலி தலையின் உச்சியில் அக, புற அதீதம் நிலைக்கு வந்து பரவசம் அடைகிறது.
     எளிய முறையில் ஆத்ம பிரார்த்தனையால் மூலம் உடல், மனம், ஆத்மா ஆகியவை ஒன்றோடு ஒன்று பெறும் தொடர்பிளை அறிய முடியும். இந்த இரகசியத்தின் ஆழத்தினை அறிந்து கொண்டால் வேறு எதையும் நாடவோ அறியவோ தேடவோ வேண்டியதில்லை. நீங்கள் முற்றிலும் புதியதான தெய்வீக யாத்திரையை மேற் கொள்வதாக உணர்வீர்கள். இந்த பயணம் உங்களது இயல் புணர்வைப் புரிந்து கொள்கின்ற தன்மை, வாழ்க்கையின் பயன் ஆகியவற்றைப் பற்றிக் கற்பனைக்கு எட்டாத அளவிலும் வியப்புறும் வகையிலும் உணர்த்தும்.
      எளியமுறை ஆத்ம பிரார்த்தனையால் மன மண்டலத்திலும், உடலிலும் உணர்வு சென்று மீள்வது இயல்பாகிவிடும். இந்தப் பயிற்சி போதிய அளவு உடல் நலத்தை அதிகரிக்கிறது. மன உளைச்சலைச் சமநிலைப்படுத்துகிறது. ஆயுளை நீடிக்கச் செய்கிறது. அலைபாய்கின்ற மனநிலையை அடக்கி அமைதியுறச் செய்கிறது. பிரார்த்தனை மிக ஆழமாகவும் தீவிரமாகவும் இருக்குமெனில் நம்முடைய பாவச் செயல்களை விலக்கி அமைதியினை அறிந்துகொண்டு நாம் செயலாற்ற முடிகிறது. இதன் விளைவாக நம்முடைய மூளையின் திசுக்களில் சக்தி சிறிது சிறிதாக அதிகரித்து பலப்படுத்தி இயல்புணர்வை விழிப்புற செய்கிறது.
      எளிய முறை ஆத்ம பிரார்த்தனையின்போது இரத்த ஓட்டத்தின் சுரப்பிகளில் பிராணவாயு அளவு கூடுதலாகிறது. இதனால் துடிப்பான நீடித்த வலிமையுடைய உடல் உறுப்புகள் அமைகின்றன. இதன் விளைவாக உங்களது வாழ்க்கையின் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறலாம். இறைவனுடைய சட்ட திட்டங்கள் முழுமையாகக் கடைபிடிக்கப் படும்போது நம்முடைய ஆன்மீகம் மற்றும் இதய பிரார்த்தனை நிறைவேறும். நம்முடைய இதயத்திலிருந்து பிரார்த்தனையைத் தொடர்ந்து செய்வதால் நமது வீண் பெருமை மற்றும் கர்வம் அனைத்தும் நீங்கி விடும்.
    கர்மா என்ற அதி அற்புத வினையில் வெற்றி காண்பது சிரமமாகும். தூய்மையாகச் செயல்பட்டு இதனை அனுபவிக்க வேண்டும். இதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். “நான் யார்?” இந்தத் தெளிவு கடைசி மூச்சுள்ளவரை இருக்க வேண்டும். பூரணத் தெளிவோடு இருக்கும்போது பேருண்மை உனக்குத் தெளிவாகிவிடும். நமது தற்பெருமை நீங்கிவிட்டால் நம்முடைய ஆத்ம பிரார்த்தனையின் ஆழம் அனுபவத்தில் தெரியவரும். அப்போது இறைவனிடத்தில் நாம் செலுத்துகின்ற அன்பும், பக்தியும் சிறிது சிறிதாக விழித்தெழும். இறைவன் வேறு எங்கேயோ இருக்கின்றான் என்பதை உணர இயலாதவர் அல்லர். அவர் நம் இதயத்திலேயே நம்முடனேயே இருக்கிறார். தூய்மை செய்யப்பட்டுள்ள நமது மூளை அங்கிருந்து இறைவனிடத்தில் பக்தி அலைகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். இதன் கருத்து என்னவெனில் இறைவனிடத்தில் மனித இயல்புகள் அனைத்தையும் முன்வைத்துப் பிரார்த்தித்தால் படிப்படியாக இயல்புணர்வு விழிப்படையச் செய்து ஆத்மாவை அறியும் சக்தியை கொடுக்கின்றது.
      இதன்மூலம் இறைவனிடத்தில் நமக்கு நம்பிக்கை பெருகுகின்றது. நாம் தனித்து விடப்பட்ட அனாதை அல்ல என்பதை நமது எளிய முறை ஆத்ம பிரார்த்தனையின் போது உணர முடிகின்றது. நம்முடைய தலையிலிருந்து இதயம்வரை உள்ளானந்த வெள்ளம் பெருகி நமது இயல்புணர்வை விழிக்கச் செய்கிறது. இதனைப் பழகப் பழக இயற்கையில் இருக்கின்ற ஆற்றலை உணர்ந்து கொள்ளச் செய்கிறது. இந்த பரிமாற்றத்தினை நாம் எளிய முறை ஆத்ம பிரார்த்தனை என்று கூறுகின்றோம். எளிய முறை ஆத்ம பிரார்த்தனை பரம்பொருளையும் நம் ஆத்மாவையும் இணைக்கின்ற பாலமாகும். மனிதர்களின் சொந்த வாழ்க்கை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எளிய முறை ஆத்ம பிரார்த்தனை ஒரு பாதுகாப்பான சாதனம். இத்தகைய வலிமை வாய்ந்த எளிய முறை கூட்டுப் பிரார்த்தனை பரம் பொருளை அனைவரது உள்ளத்திலும் இல்லத்திலும் அழைத்துவரும்.
      நாம் ஒருவருக்கு ஒருவர் முடிந்த வகையில் உதவி செய்து கொள்வோம். இந்த ஆத்ம தேடுதலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். இந்த வாய்ப்பில் நமது அகமும் புறமும் உள்ள இயற்கை ஆற்றலை ஒருங்கிணைத்து இயல்புணர்வை விழிப்புறச் செய்து, நமது அன்றாட வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றுவோம். நாம் அனைவரும் இணைந்து பயணம் புரிவோம்.


No comments:

Post a Comment