Friday, August 26, 2011

6. முத்திரைகள்


6. முத்திரைகள்

    முத்திரை என்பதற்குச் சின்னம் அல்லது அடையாளம் என்று பொருள் கூறலாம். முத்திரை என்பது உடலுக்குக் கூடுதலான இயற்கை ஆற்றலை ஊட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் சில அடையாளச் செய்கைகளாகும். முத்திரைப் பயிற்சிதான் நாம் மூளைக்குச் செய்யும் பயிற்சியாகும். இதனால் மூளையில் பாசிடிவ் தன்மை அதிகரிக்கிறது. மூளை உறுதியாகச் செயல்பட உதவுகிறது. விரல் நுனிகளை மெதுவாகத் தொட்டு விடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

     ஆத்ம பிரார்த்தனையில் இயற்கை சக்தியும் மனிதனின் மனோ சக்தியும் ஒன்றிணைகின்றன. இது சரீரத்தில் சூட்சமத்திலுள்ள இயல்புணர்வு சக்திகளை வெளிப்படுத்திச் செயல்படுத்திப் பல நல்ல செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. நாள்தோறும் காலை மாலை 6.30 மணியிலிருந்து 6.51 வரை (மொத்தம் 21 நிமிடங்கள்) 5 முத்திரைகளைச் செய்தால் அற்புதமான அனுபவத்தைப் பெறுவீர்கள். உடம்பினுள் திணித்து வைக்கப்பட்டு அங்கேயே சிறைப்பட்டுக் கிடக்கும் ஆற்றல்கள் ஐந்து முத்திரைகள் செய்வதன் மூலம் பீறீட்டுக் கொண்டு ஆவேசமாக இளமைத் துடிப்புடன் வெளிக்கிளம்பும்.

    ஆத்ம பிரார்த்தனையில் பத்மாசனத்தில் அல்லது நமக்கு வசதியான இருக்கையில் அமரலாம். நாற்காலியில் அமரும் போது கால்கள் நன்றாகத் தரையில் படும்படி அமரவும். உடல் நேராக நிமிர்ந்து உட்காரவும், முத்திரையைப் பழகக் கை விரல்களைத் தளர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். விரல் நுனிகள் மெதுவாக ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதில் சுவாசமானது ஆழமாகவும் நிதானமாகவும் இயங்க வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது விரல் நுனிகளை மென்மையாக அழுத்தவும், சுவாசத்தை வெளியே விடும்போது விரல் நுனிகளைச் சிறிது இடைவெளி விட்டு வைத்து இருக்க வேண்டும். விரல்கள் பழகப் பழகச் சுலபமாக ஒத்துழைக்கும்.
ஆத்ம பிராத்தனையின் முத்திரைகள் :

            1. பிருதிவி முத்திரை :  இதில் பெருவிரல் முனையையும், மோதிர விரல் முனையையும் வட்ட வடிவில் இணைத்துக் கொண்டு மற்ற விரல்களை நேராக நீட்டி வைக்கவும். இதில் உள்ளங்கை பூமியை நோக்கி இருக்க வேண்டும். இவ்வாறு நான்கு நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
இது மூலாதாரச் சக்கரத்திற்கு சக்தியைக் கொடுக்கிறது. இருவிரல்களின் வழியே பூமியிலுள்ள நல்ல சக்திகள் (மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை) செல்வதை உணரலாம்.
          2. தியான முத்திரை : இடக் கை வலக் கை விரல்களின் மேல் இருக்குமாறு வைக்க வேண்டும். கட்டை விரல்கள் இரண்டையும் இணைத்து மேலே தூக்கியபடி தொப்புள் பகுதியை நோக்கி வைக்கவும். இம்முத்திரை நான்கு நிமிடங்கள் வரை செய்யப்படும்.
இந்த நிலையில் அற்புதமான அமைதி நிலை ஏற்படுகிறது. மனமும் எண்ணங்களும் தூய்மையடைந்து இறைவனிடமிருந்து அவனது அருளையும், அன்பையும், கருணையையும் அருளுமாறு வேண்டினால் அது கிடைக்கும். இந்த நிலையில் தாயின் வயிற்றில் கருவுக்கு எப்படி சக்தியும் எண்ணங்களும் ஆற்றலும் செல்லு கின்றனவோ அதுபோல் இறைவனுக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை உணரலாம்.
        3. ஞான முத்திரை : பெருவிரல் நுனி ஆள்காட்டி விரல்நுனியைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். மெய்மையுணர்வு மூலம் உடல், மனம், ஆன்மா ஆகியவைகள் தூய்மை அடைகின்றன. கருமவினைகள் குறைகின்றன. இம்முத்திரை ஆறு நிமிடங்கள் வரை செய்யப்படும்.
           4. அதீதம் உத்திர போதி முத்திரை :  தலைக்கு மேல் துரியம் உள்ள இடத்தில் கைகளின் பெருவிரல்கள் இரண்டையும் இணைத்து, ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் ஒன்றுசேர்த்து நேராக அதை நீட்டிவிடவும். மற்ற விரல்களை மடக்கி வைக்கவும். இந்த நிலையில் எண்ணங்களை உச்சிக் குழிக்குக் கீழே உள்நாவுக்கு மேலே செலுத்தவும். இது நம்மை கடந்த நிலை. இம்முத்திரை நான்கு நிமிடங்கள் வரை செய்யப்படும்.
             5. சின் முத்திரை : பெருவிரல் நுனியையும் ஆள்காட்டி விரல் நுனியையும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு வைக்கவும். இந்த விரல் இரண்டும் வட்டம் போல் இணைய வேண்டும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல்கள் ஆகியவை சற்று வளைந்து இருக்க வேண்டும். இவை மூன்றும் மாயை, கர்மம், வீண் கற்பனை ஆகிய மும்மலத்தை நீக்கி ஆத்மாவையும் பிரம்மத்தையும் இணைக்கும் தன்மையை உருவாக்குகின்றன. இம்முத்திரை ஐந்து நிமிடங்கள் வரை செய்யப்படும்.
இதனால் அவரவருடைய இயல்புணர்வுதான் உண்மையான குரு என்ற எண்ணம் ஏற்படும். இதனால் தூய்மையான மேன்மை நிலையைப் படிப்படியாக அடைவீர்கள்.
      ஆத்ம பிரார்த்தனையை இயல்புணர்வுடன் பழகும் போது பரிபூரண அமைதி நிலை உருவாகிறது.
     அதீதம் முத்திரை : இடக்கையின் பெருவிரல் முனையையும் மோதிர விரல் முனையையும் வட்ட வடிவில் இணைக்கவும். விரல்கள் பூமியை நோக்கி இருக்க வேண்டும். இந்த முத்திரையை நீங்கள் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். உங்கள் தீய எண்ணங்களைத் திசை திருப்பவும் அதன் வேகத்தைக் குறைக்கவும் பயன்படும்.
    ஆத்ம பிரார்த்தனை செய்யும்போது தோன்றும் முத்திரைகள் இயல்பானவையாகவும், எளியவையாகவும் சூக்குமமானவையாகவும் இருக்கும். இதனால் உடலுக்கும் மனத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுகின்றது. இதன் மூச்சு நிலைகளை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்வதோடு ஒட்டுமொத்த இயல்புணர்வும், அந்த வடிவங்களில் உட்புகுத்தப்படுகிறது. இவ்வாறு இயல்புணர்வு நிலை, தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டப்படுத்துகின்றது; சாந்தப் படுத்துகிறது. இதனால் மனம் உறுதிப்படுகிறது. மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது.
       இயற்கை சக்தியை நமது உடலிலுள்ள முக்கியமான நாடிகளுக்கு இட்டுச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் இயல்புணர்வை விழிப்படையச் செய்கின்றது. இதனால் சூக்கும சரீரத்தை (நுண் உடலை) அறியச் செய்து முதிர்ந்த நிலையில் அதிசூக்கும வெளிக்குச் செல்லும் ஆற்றல் பெற்று, வந்து செல்வது இயல்பாகிவிடும். இறுதி மரண வேளை நெருங்கும்போது இந்த ஜீவன் அதிசூக்கும வெளிக்குச் சென்று பிரம்ம மந்திரம் வழியே வெளியே செல்லும். ஜீவன் மரண சுகத்தையும், அருட்சுகத்தையும் அனுபவிக்கும். இதுவே உயர்ந்த நிலை; பிறப்பின் பெரும் பயனாகும்.
மரண சுகம் கண்டவன் ஞானி. மரண சோகம் கண்டவன் அஞ்ஞானி.


No comments:

Post a Comment